Monday, December 17, 2007

சில காதல் கவிதைகள்...

ஓ ஜீசஸ்!

விரும்பிச் சுமக்கும்
சிலுவை
காதல்!

*****

ஒளிரும் தீ!

உள்ளொளி பூரிப்பில்
ஒளிரும் தீ
காதல்!

காக்கும்
அதுவே
சாய்க்கவும்
செய்யும்

உணர்ந்து நெருங்கிடில்
காதலே நிம்மதி
உணராது நெருங்கிடிலோ
விலகிடுமே நிம்மதி.

*********

சரிப்படும்?

அது சரிப்படுமா
இது சரிப்பட்டு வருமா
என
முடிவெடுப்பதில்
வாழ்வை ஒத்திப்போடாமல்
எதார்த்தத்தை நினைவிலிருத்தி
சம்மதம் என்றொரு
வார்த்தை சொல்
சட்டென்று!
சீர்தூக்கிப் பார்த்து
செதுக்கிக் கொள்ளலாம்
வாழ்க்கையை!

********

நீ சிரித்தால்...

நீ சிரித்தால்
தீபாவளியாம்
இவர்கள் சொல்லுகிறார்கள்...
நீ இமைத்தாலுமே
தீபாவளிதான்
என்பது
இவர்களுக்கு எங்கே
தெரியப்போகிறது?

*********

வாழ்க்கை

கருவறையில் தொடங்கி
கல்லறையில் முடிகிறதாம்
மனித வாழ்க்கை!
ஆனால்
என் வாழ்க்கையோ
உன் சிரிப்பில்தான்
தொடங்குகிறது
பிறர் பார்த்து
நகைக்கும்படி
முடிகிறது.

********

வழுக்குப் பாறை!

கணநேர சறுக்கல்கள்
எனக்காகவா என
வழுக்கி விழுந்ததொரு
தருணம் பார்த்து
வியந்து கேட்டவளிடம்
எப்படி எடுத்துரைப்பேன்?
காதலும் ஒரு
வழுக்குப்பாறைதான்
என்பதை!

********

காதலின் நிலை!

வலியறியாமல்
விலகுவது
இங்கு
சாத்தியமில்லை.

அறியாமல் கேசச்சுருளில்
வந்து சிக்கிக்கொண்ட
ஈயின்
நிலையைப் போன்றதுதான்
நேசம் என்னும்
வலையில்
சிக்கிக்கொண்டுவிட்ட
காதலின் நிலையும்!

**********

தற்கொலை வேண்டாமே..!

தனித்துவம் எதற்கு
தற்கொலைக்கு?
உன் நினைவுகளே
நித்தமும் என்னைச்
சத்தமின்றிக் கொல்கையில்..!

*****

No comments:

About Me

My photo
பெரிய கடவுள் அரிய தகவல்கள் (பிள்ளையார்), சுடர்விடும் சூப்பர்ஸ்டார் (திருமலை திருப்பதி), கிரிவலம் (திருவண்ணாமலை மகிமை), செல்வத்தை அள்ளித் தரும் லக்ஷ்மி குபேர பூஜை என்ற நான்கு புத்தகங்களை சந்திரசேகர சர்மா என்ற பெயரில் எழுதியுள்ளேன். இவை New Horizon Media Pvt Ltd. மூலம் வரம் வெளியீடாக வந்துள்ளது. தவம் வெளியீடாக ஸ்ரீராம நவமி மற்றும் திருப்பதி என இரண்டு புத்தகங்கள் சைதை முரளி என்ற பெயரில் வெளியாகியுள்ளது. சமீபத்தில் திரிசக்தி பதிப்பகத்தில் இருந்து ‘நூறு வயது வாழ வேண்டுமா?’ - சித்தர்கள் சொல்லும் வாழ்வியல் ரகசியங்கள் என்ற நூலும் ‘சைதை முரளி’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது.