Monday, December 18, 2006

பிரும்மரகசியம்!

சொல்வதற்கு எதுவுமில்லை
இனி உன்னிடம்.

சொன்னால்தான் காதல்
பூரணம் பெறும்
என்பதிலும் உடன்பாடில்லை
எனக்கு.

சொற்களால் மட்டுமே
புரியவைத்துவிட முடியாது
வாழ்க்கையை.

யாசித்துப் பெறுவதில் இல்லை
யோசித்துப் புரிதலில் உள்ளது
நேசம்.

உள்ள(த்)தை வெளிப்படுத்த
உனக்கு வெட்கமெனில்
எனக்கோ தயக்கம்.

உணர்வுப் பின்னல்கள்
உந்தித் தள்ள
அதன் வெளிப்பாடாய்
நிகழ்வதென்னவோ
செயல்களாலும்
செய்கைகளாலுமான
மெளன மொழி மட்டுமே.

எல்லாம் தெரிந்த சிவனும்
குமாரனிடம் மெளனமாக
பிரும்ம ரகசியம் கேட்டதை
யோசித்துப் பார்.

அவ்விதமாகவேனும்
காதலை
வெளிப்படுத்த
நீ தயார் எனில்,
ஒன்றும் தெரியாததுபோல
நானும்
அந்த பிரும்ம ரகசியத்தை அறிய
என் காதை
உன் உதட்டருகில்
கொண்டுவர
உத்தேசமாய் இருக்கிறேன்.

Monday, November 20, 2006

கூட்டணி இலவசம்?!

ஒருமுறை சுனாமி வந்த பாதிப்பிலிருந்தே மக்கள் இன்னமும் மீளாதிருக்கிறார்கள். இந்நிலையில் மீண்டும் சுனாமி வரலாம் என்று அவ்வப்போது கூறி கலவரப்படுத்தும் நிலையும் நிலவி வருகிறது. இது குறித்துச் சிந்தித்ததில் தோன்றியது இந்தக் கவிதை!


ஆழிப் பேரலையின்
ஊழித் தாண்டவமே
இங்கு
யார்மீது உன் கோபம்?

பொறுமைக்குப் பேர் போனவள்
என்ற புகழுரை
உனக்குப் பிடிக்கவில்லையோ?
எங்கள்மீது உள்ள அன்பினால்தான்
நாங்கள் செய்யும் அத்துனை அத்துமீறல்களையும்
பொறுத்துப போன நீ,
முடியாத கட்டத்தில்
அவ்வப்போது நிலநடுக்கம்
என்ற ஒன்றாகத் தோன்றி
எங்களை நடுங்க வைத்துக்கொண்டிருந்தாய்.

சுனாமியே!
மண்ணின்(ல்) மைந்தர்கள்
செய்யும் அட்டூழியம்
தாங்கவில்லையென்று
எங்கள் தாய் உன்னிடம் வந்து
அழுது முறையிட்டனளோ?
நீயும் உடன்
எந்தவொரு முன்னறிவிப்புமின்றி
கொடுங்கோலனாய்ச் சீறி எழுந்து
லட்சக்கணக்கில் உயிர்களைக்
கொள்ளை கொண்டனையோ?

தாயாக நீ இருந்தாலல்லவா
எங்களின் தவிப்பும் வேதனையும்
உனக்குப் புரிந்திருக்கும்.
நீதான்
பேயாக மாறிவிட்டிருக்கிறாயே!
எதையும் அரசியலாக்கும்
எங்களின் புத்தி
இனி ஒருபோதும்
உங்களுக்குள் வேண்டாம்.

சுனாமியே!
இனி ஒருபோதும் வேண்டாம்
உங்களுக்குள்
இதுபோன்றதொரு இலவசக் கூட்டணி!

- சைதை முரளி.

விடுதலை?

சிறு வித்து ஒன்றினுள்
விஸ்வரூப வளர்ச்சிக்கான
பரிணாமம் மறைந்திருப்பதும்,

பட்டாம்பூச்சி மனிதர்கள்
பாழாய்ப்போன காதலினால்
பரிதவித்து முடங்குவதும்,

மெழுகுவர்த்தியாய் உழைத்தும்
மெர்க்குரிப் பிரகாசமாய்
வாழ்க்கை அமையாதிருப்பதும்,

இலட்சியங்களால் நிரம்பியிருப்பவனை
அறிவிப்பேதுமின்றி காலன்
துணைக்கழைப்பதும்

புரியாத புதிர்களெனில்...

நிலையான அரசைத் தருவார்களென்ற
நப்பாசையில்
வாக்களிக்கும் மக்களுக்கு
வாய்க்கரிசி போட்டு
வருஷத்துக்கொருமுறை
தேர்தலைக் கொண்டுவரும்
வேசியவாதிகளின் அரசியல்...

குருவி தலையில் பனங்காயாய்
குடிகளுக்கு என்றும்
புரிந்தும் புரியாத புதிர்தான்!


- சைதை முரளி.

Monday, October 30, 2006

நீயா, நானா?

நீயா, நானா?

பிடித்த வாழ்க்கையை
வாழ்ந்துவிடச் சொல்லி
அறிவு அறிவுறுத்துகிறது
சில சமயம்.

கிடைக்கும் வாழ்க்கையை
அனுபவித்துவிடக் கூறி
உணர்வு உந்துகிறது
பல சமயம்.

மின்னலைத் தொடர்ந்துவரும்
இடியாய்
சில சமயங்களில்
அறிவும்...

இடியைத் தொடர்ந்துவரும்
மழையாய்
பல சமயங்களில்
உணர்வும்...

நீயா, நானா?
என
வாழ்க்கைப் பாதையில்.

இவற்றில் எதைத் தேர்வது?
விடை புரியாத
கேள்வித்தாளாய்
சில சமயங்களிலும்
பல சமயங்களில்
விடை அறிந்தும்
பதிலிறுக்க முடியாதவண்ணம்
குழப்பத்தில் ஆழ்த்தி
கண்ணாமூச்சிகள் காட்டிடினும்
வாழ்ந்தாக வேண்டியிருக்கிறது
வாழ்க்கையை..!

About Me

My photo
பெரிய கடவுள் அரிய தகவல்கள் (பிள்ளையார்), சுடர்விடும் சூப்பர்ஸ்டார் (திருமலை திருப்பதி), கிரிவலம் (திருவண்ணாமலை மகிமை), செல்வத்தை அள்ளித் தரும் லக்ஷ்மி குபேர பூஜை என்ற நான்கு புத்தகங்களை சந்திரசேகர சர்மா என்ற பெயரில் எழுதியுள்ளேன். இவை New Horizon Media Pvt Ltd. மூலம் வரம் வெளியீடாக வந்துள்ளது. தவம் வெளியீடாக ஸ்ரீராம நவமி மற்றும் திருப்பதி என இரண்டு புத்தகங்கள் சைதை முரளி என்ற பெயரில் வெளியாகியுள்ளது. சமீபத்தில் திரிசக்தி பதிப்பகத்தில் இருந்து ‘நூறு வயது வாழ வேண்டுமா?’ - சித்தர்கள் சொல்லும் வாழ்வியல் ரகசியங்கள் என்ற நூலும் ‘சைதை முரளி’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது.