Saturday, January 12, 2008

உறவுக் கோலம்...

உறவுக் கோலம்...

பண்டிகை தினம்,
தெருவாசல் வரித்து
கோலம் போட்டிருந்தாள்
அம்மா.

மதிக்காது
மிதித்துச் சென்றோரால்
மனம் வருந்திய
என் பிள்ளை
சிறிதாகப் போட்டிருக்கலாமென்று
சிந்தனை உதிர்த்தான்.

’மிதித்தே பழகிய பாதங்கள்
பழகிப் போனதால்
வலியேதுமில்லை‘ என்றவளை
புரியாது பார்க்கிறான்...
புரிந்தது எனக்கு.

Friday, January 11, 2008

எம்.எஸ்.

எம்.எஸ். கவிதாஞ்சலி - 2005-ல் எழுதியது.

நீ மறைந்ததாக யார் சொன்னது?
நீயே ஒரு சங்கீதம்!
எங்கள் நினைவுகளிலும் நீக்கமற
நிறைந்திருக்கும் உன் கீதம்.
பேரின்பம் என்பது வேறொன்றுமல்ல...
எம்.எஸ். என்ற
இரண்டெழுத்தின் தேவகானமே அது!

Monday, December 17, 2007

ஹைக்கூ...

பேச்சாளர் சிறப்புறப் பேசியும்
கைதட்ட இயலவில்லை
கையில் தேநீர் கோப்பை.

*******

கவனமுடன் உயிர்கொடுத்தான்
பலூனுக்கு
துப்பாக்கியால் சுடப்பட!

போதி மரம்!

கலர்களைக் காட்டி
கலா ரசிகனாக்கும்.

பொறுமையைப் போதிக்கும்
ஆசானாகத் திகழும்.

வன்மத்தைத் தூண்டும்
வழிகாட்டியாகவும் மாறும்.

சிந்தையைக் கிளறி
சிந்தனாவாதியாகவும் மாற்றும்.

இதுவும்
இதற்கு மேலும்கூட
(போ)பாதித்து நிற்கும்
மாநகரப் பேருந்திற்காக
நாம் காத்து நிற்கும்
பேருந்து நிறுத்தம்!

வாழு, வாழவிடு!

எதற்காகவும்
யாருக்காகவும்
காத்திருப்பதில்லை காலம்!

'வாழு, வாழவிடு'
என்ற வார்த்தைகளெல்லாம்
வழக்கொழிந்துபோய்
நீ வாழ
பிறரை வருத்தியெடு
என்றாகிவிட்டது
தற்போதைய வாழ்க்கை.

'வெள்ளத்தனைய மலர் நீட்டம்!'
என வெல்லமாகப் பேசும் சிலரும்
தங்கள் வாழ்வை மேம்படுத்தத்தான்
பேசிச்செல்கிறார்கள் என்பதை
உணர்வதில்லை கேட்கின்ற எவரும்.

உழைப்புக்கேற்ற ஊதியம் தராத
உழைப்புத் திருடர்களையும்
பிறர் உழைப்பிலேயே காலந்தள்ளும்
பிழைப்புத் திருடர்களையும்
கொண்டதாகத்தான் இருக்கிறது
சமூகம்.

'எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்'
என்ற வள்ளுவ வாக்கினில் மதிப்பு வைத்து
நம் மதிப்பறிந்து நிமிர்ந்து நின்றால்
காலம் கைகோர்த்துவரும் நம்மோடு!

ஜடம்!

எதையும்
ஜடம் என்று கூறாதீர்கள்!

அதனுள்ளும் நடனமாடும்
அணுத்திரள்கள்.

நடைபிணம் என்றாலும்
கிடைபிணம் என்றாலும்
அதனுள்ளும் உண்டு
ஓர் இயக்கம்.

மூடிக்கொள்ள மறுக்கும்
கதவுக்குக்கூட
இருக்கலாம்
ஒரு பிணக்கம்.
அதை உணர்வதில்தான்
ஏனோ நமக்கு சுணக்கம்.

எனவே
ஜடம் என்று
எதையும் கூறாதீர்கள்...

சுகமான சுமைகள்...

சுமைகளும்
சுகமாகத் தோன்றும்
சுமக்கத் தெரிந்தோருக்கு...

கையில்
உளியைச் சுமந்தவன்
சிற்பியாகிறான்.

எண்ணத்தில்
தத்துவங்களைச் சுமந்தவன்
வேதாந்தியாகிறான்.

உயிர்களிடத்தில்
அன்பைச் சுமந்தவன்
ஞானியாகிறான்.

சுமைகளும்
சுகமாகத் தோன்றும்
சுமக்கத் தெரிந்தோருக்கு.

இமைகளும்
சுமையாகத் தோன்றும்
சோம்பிக் கிடப்போருக்கு!

About Me

My photo
பெரிய கடவுள் அரிய தகவல்கள் (பிள்ளையார்), சுடர்விடும் சூப்பர்ஸ்டார் (திருமலை திருப்பதி), கிரிவலம் (திருவண்ணாமலை மகிமை), செல்வத்தை அள்ளித் தரும் லக்ஷ்மி குபேர பூஜை என்ற நான்கு புத்தகங்களை சந்திரசேகர சர்மா என்ற பெயரில் எழுதியுள்ளேன். இவை New Horizon Media Pvt Ltd. மூலம் வரம் வெளியீடாக வந்துள்ளது. தவம் வெளியீடாக ஸ்ரீராம நவமி மற்றும் திருப்பதி என இரண்டு புத்தகங்கள் சைதை முரளி என்ற பெயரில் வெளியாகியுள்ளது. சமீபத்தில் திரிசக்தி பதிப்பகத்தில் இருந்து ‘நூறு வயது வாழ வேண்டுமா?’ - சித்தர்கள் சொல்லும் வாழ்வியல் ரகசியங்கள் என்ற நூலும் ‘சைதை முரளி’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது.